Menu

October 23, 2018
Pondy 07:02 AM +25°C

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான் பாரத் தேசிய காப்பீடு திட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில், ஒரு லட்சம் குடும்பங்கள் பயன் பெற உள்ளன.

 

உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக ‘ஆயுஷ்மான் பாரத்’ என்று அழைக்கப்படும் இந்தியாவின் தேசிய காப்பீடு திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் இத்திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

 

புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்த விழாவில், இத்திட்டத்தை கவர்னர் கிரண்பேடி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

 

தலைமை செயலர் அஸ்வனி குமார், சுகாதாரத் துறை செயலர் கந்தவேலு, இயக்குனர் ராமன், அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த மருத்துவக் காப்பீட்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து, ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

 

இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசினாலும், மீதித் தொகையை மாநில அரசுகளும் ஏற்கும். இந்த புதிய மருத்துவக் காப்பீடு திட்டமானது முற்றிலும் பணமற்ற திட்டமாகும்.

 

இத்திட்டம் நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கிராமபுறத்தில் வசிக்கும் 8.03 கோடி குடும்பங்களும், நகர் புறத்தில் 2.33 கோடி குடும்பங்களும் பயன்பெறும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தில் கீழ் கரோனரி பைபாஸ் சிகிச்சைகள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டென்டிங் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பெறுவதற்கு வசதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதார திட்டத்தை விட 20 சதவீதம் மலிவான கட்டணத்தில் அளிக்கப்பட உள்ளது.

 

ஆயுஷ்மான் பாரத் தேசிய காப்பீடு திட்டத்தில் பயனாளிகளின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் எண் கோரப்பட்டுள்ளது. ஆதார் அட்டை பயன்படுத்துவது விருப்பத்துக்கு உட்பட்டதே தவிர கட்டாயம் இல்லை.

 

ஆதார் அட்டை இல்லாத காரணத்தை கூறி எவரும் இத்திட்டத்தில் பலன் மறுக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

ஆதார் இல்லாத பட்சத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட இதர அரசு அடையாள அட்டைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தேசிய அளவிலான ஹெல்ப் லைன் எண்-14555 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon