Menu

November 18, 2018
Pondy 08:55 AM +28°C

புதுவை அமைச்சரவையில் கலைஞர் கருணாநிதி புகழாரம்

சட்டசபை அமைச்சரவை கூட்டத்தில், கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி, முதல்வர் நாராயணசாமி தலைமையில், சட்டசபையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.

 

அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், டி.ஜி.பி., சுந்தரி நந்தா மற்றும் அரசுத் துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில், கருணாநிதி மறைவுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் வருமாறு:

 

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவருமான கருணாநிதி மறைவு செய்தி கேட்டு, அமைச்சரவை மிகுந்த துயருறுகிறது.

 

திருவாரூர் மண்ணில் திருக்குவளை கிராமத்தில் பிறந்து, சிறுவயது முதலே திராவிட இயக்கத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக அரசியலில் ஆர்வம் கொண்டு பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் அவர்.

 

இந்தி எதிர்ப்பு போராட்டம், கல்லக்குடி பெயர்மாற்றப் போராட்டம், என பல போராட்டங்களை இளம் வயதிலேயே நடத்தி வெற்றிகண்டவர்.

 

தான் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து பணியாற்றியவர்.

 

சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள் அத்தனையும் ஆக்கபூர்வமானவை. அவரின் உரை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

 

ஜனநாயகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர்.

 

அரசியல் மட்டுமல்லாது கலை, இலக்கியம், கவிதை பத்திரிகை துறை, திரைப்பட துறை, சமூக நீதி, பொதுவுடமை போன்றவற்றிலும் சிறந்து விளங்கியவர்.

 

பன்முகத் தன்மை கொண்டவர். தமிழ் மற்றும் தமிழர்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். தமிழுக்கு அளப்பரிய தொண்டாற்றியவர். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

 

அகில இந்திய அரசியலிலும் ஈடுபட்டு, பல பிரதமர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. அதன் மூலம் இந்தியாவே உற்று நோக்கிய அரசியல்வாதியாக திகழ்ந்தவர்.

 

அவருடைய இழப்பு தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கும், உலகத் தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

 

கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், தி.மு.க.,வினருக்கு புதுச்சேரி மக்கள் சார்பில் இந்த அமைச்சரவை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon